Home » , » இணையதளத்தில் காட்டப்படும் பிளைசெய்திகள்

இணையதளத்தில் காட்டப்படும் பிளைசெய்திகள்


இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக்காமல், சில வேளை களில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் தகவல்கள் பொதுவானதாகவே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. சான்றிதழ் பிழை (certificate error):




இத்தகைய பிழைச் செய்திகள் பெரும்பாலும் SSL certificate error அல்லது security certificate error எனக் கிடைக்கும். இது HTTPS சுருக்கத்தில் ஏற்பட்ட பிழை. HTTPS எனத் தன் முகவரி தொடக்கத்தினைக் கொண்ட இணைய தளங்களைப் பெற முயற்சிக்கையில் மட்டுமே இத்தகைய பிழைகள் காட்டப்படும். இது போன்ற தகவல் சுருக்கு முறைகளைக் கையாளு கையில், இணையதளங்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழை முதலில் அனுப்புகின்றன. எடுத்துக்காட்டாக Google.com இணைய தளம், இதற்கென சான்றளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்து பாதுகாப்பான தளம் என்பதற்கான சான்றிதழைப் பெற்றிருக்கும். சான்றிதழ் அதிகார அமைப்பு வழங்கிய இந்த சான்றிதழுக்கு உரிமையாளரான Google.com என்ற தளத்திலிருந்து இது வருகிறதா என நம் பிரவுசர் இதனைச் சரி பார்க்கும். சரியான அதிகார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதா எனச் சரி பார்க்கும். அதே போல, அந்த சான்றிதழில் கூறப்பட்டுள்ள Google.com தளம் உண்மையிலேயே அதுதானா? அல்லது அதே பெயரில் உள்ள வேறு ஒரு தளமா என்பதனையும் சரி பார்க்கும்.
நாம் பிழைச் செய்தி ஒன்றைப் பெற்றால், நாம் தேடும் Google.com தளத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்படவில்லை என்று சந்தேகிக்கலாம். எடுத்துக்காட்டாக, வைபி இன்டர்நெட் இணைப்பு உள்ள இடத்தில், நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கினை அணுகும் போது, இந்த பிழைச் செய்தி கிடைத்தால், வைபி சார்ந்த நெட்வொர்க்கில் ஒருவர், உங்கள் வங்கிக் கணக்கினைக் காட்டும் தளத்தைப் போல ஒன்றை உங்களுக்குக் காட்டி உங்களை ஏமாற்றும் வழியை மேற்கொண்டுள்ளார் என்று பொருள். நீங்கள் தேடும் தளம், அதற்கான பாதுகாப்பு சான்றிதழை புதுப்பிக்காமல் இருந்தாலும் இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும்.
2. மால்வேர் எச்சரிக்கை:




சில நேரங்களில், இணைய தளங்களை அணுகுகையில், பிஷ்ஷிங் (“web forgery”) மற்றும் மால்வேர் எச்சரிக்கைகளை நாம் பெறலாம். நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அவை வழக்கமாக சில தீமை விளைவிக்கும் அபாயமான இணைய தளங்களின் பட்டியலையும் பெறுகின்றன. இந்த பட்டியலில் உள்ள இணைய தளம் ஒன்றினை, நீங்கள் இறக்கிப்பார்க்க முயற்சிக்கையில் இந்த எச்சரிக்கை செய்தி காட்டப்படுகிறது. மால்வேர் புரோகிராம்களை இணைத்துக் கொண்டுள்ள இணைய தளங்கள், புகழ் பெற்ற இணைய தளங்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிரெடிட் கார்ட் எண்கள், பாஸ்வேர்ட் ஆகிய ரகசிய தகவல்களைத் திருடும் தளங்கள் பிரவுசரில் கிடைக்கும் போது, அவற்றின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு வைக்கப்படுகின்றன. நீங்கள் இந்த பட்டியலில் உள்ள முகவரிகள் உள்ள தளங்களைப் பார்க்க முயற்சிக்கையில், இந்த எச்சரிக்கை செய்திகள் காட்டப்படுகின்றன. இது போன்ற செய்திகள் கிடைக்கும்போது, நாம் தொடர்ந்து அந்த தளத்தினைப் பார்க்க முயற்சிக்கக் கூடாது.
3. இணைய தளம் காணப்படவில்லை (“404 Not Found):




அடிக்கடி கிடைக்கும் பிழைச் செய்திகளில் இதுவும் ஒன்று. இதன் பொருள் நீங்கள் காண முயற்சிக்கும் இணையதளம், இணையத்தில் இல்லை என்பதே. இந்த தளம் நீக்கப்பட்டிருக்க வேண்டும்; அல்லது, நீங்கள் அதன் முகவரியைப் பிழையுடன் டைப் செய்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஏதேனும் லிங்க் கிளிக் செய்து இதனைக் காண முயற்சித்திருந்தால், அந்த லிங்க்கில் எழுத்துப் பிழை இருக்க வேண்டும். 
4. சர்வர் இல்லை (Server not found):




பயர்பாக்ஸ் இந்த வகையிலும், கூகுள் Google Chrome could not find [website.com] எனவும் பிழைச் செய்தி காட்டினால், உங்கள் பிரவு சரால், நீங்கள் தேடும் இணைய தளத்தினைக் காண இயலவில்லை எனப் பொருள். இங்கும் நீங்கள் முகவரியினைத் தவறாக டைப் செய்திருக்கலாம்; அல்லது உங்கள் டி.என்.எஸ். சர்வர் செயல் இழந்து இருக்கலாம்.
5. இணைக்க இயலவில்லை (Unable to connect):




உங்கள் முகவரியைப் படித்த டி.என்.எஸ். சர்வர், நீங்கள் விரும்பிய இணைய தளத்திடமிருந்து சரியான பதிலைப் பெறவில்லை என்ற பொருளில் இந்த செய்தி தரப்படுகிறது. எனவே குறிப்பிட்ட இணைய தளம் செயல் இழந்து நிற்கலாம். இது போல நேர்கையில், http://www.downforeveryoneorjustme.com/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, குறிப்பிட்ட தளம் செயல் இழந்து உள்ளதா? அல்லது உங்களுக்கு மட்டும் இணைப்பு கிடைக்கவில்லையா எனத் தெரிந்து கொள்ளலாம்.
இது போல பல பிழைச் செய்திகளை நீங்கள் பெறலாம். ஆனால், மேலே காட்டப் பட்டுள்ளவை தான், அடிக்கடி நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளாகும்.



நன்றி:http://www.dinamalar.com