Home » » பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் விரைவில்...அறிமுகமாகின்றது #

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் விரைவில்...அறிமுகமாகின்றது #

News Service
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய இரண்டும் இணையத்தின் பிரிக்கமுடியாத அங்கங்களாக மாறிவிட்டன. தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இரு ஜாம்பவான்களாக இவற்றைக் குறிப்பிடுவதில் எவருக்கும் ஆட்சேபனை இருக்கப் போவது இல்லை. குறிப்பாக அரபு வசந்தத்தில் இவற்றின் பங்குகள் அளப்பரியன. மத்திய கிழக்கில் சில நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவை பெருந் துணையாக இருந்தன. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இரண்டும் பொதுவாக சமூக வலையமைப்புகள் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டாலும், மேலெழுந்தவாரியாக ஒரே மாதிரியானதென குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன. இவை இரண்டினதும் நோக்கம் என்னவோ தகவல் பரிமாற்றம், இணையத்தோடு இணைந்திருத்தல் என தெரிவிக்கப்பட்டாலும் இவை அனைத்தும் ஒவ்வொரு தனிநபர் தகவல்களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையே அடிப்படை நோக்காகக் கொண்டவை என்பது பரவலாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.
பொதுவாக சமூகவலையமைப்புகள், உலாவிகள் ஆகியன பாவனையாளர்களின் தகவல்களை அறுவடைசெய்யும் 'Data harvesting' என்று சொல்லக்கூடிய நமது தகவல்களை நம்மை அறியாமல் திருடும் குழுக்களே என்பது தொழிநுட்ப உலகத்தில் புதிய தகவல் அல்ல. இவற்றுக்கும் ஒரு படி மேலே சென்ற விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாங்சே பேஸ்புக் மற்றும் டுவிட்டர் அமெரிக்க உளவு நிறுவனங்கள் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். மத்தியகிழக்கில் புரட்சி , அமெரிக்க உளவாளிகள் என குற்றஞ்சாட்டப்படும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இரண்டும் அதில் செலுத்திய தாக்கம் என்பவற்றை தேடி ஆராய முற்பட்டால் ஒருவேளை அசாஞ்சேயின் குற்றச்சாட்டுக்கான விடை கிடைத்தாலும் கிடைக்கலாம்.
ஆனால் தற்போது நாம் தரப்போகும் செய்தி இது தொடர்பானதல்ல இது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இடையே நிலவும் போட்டித் தன்மை தொடர்பானதாகும். ஆம், சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களிடையே போட்டித் தன்மை அதிகரித்து விட்டது. நாம் ஆரம்பத்தில் கூறியது போல இரண்டும் வெவ்வேறான தளத்தில் பயணித்த போதிலும் இவற்றின் நோக்கம் என்னவோ ஒன்றுதான். அது அதிகப்படியானஇலாபத்தினை அடைதலாகும். அதற்கு இவை எந்த அளவுக்கும் செல்லும்.
இது அனைத்து வியாபார நிறுவனங்களினதும் முதற் குறிக்கோளாகும். இதற்கு இவை இரண்டும் கூட விதி விலக்கல்ல. போட்டி நிலைமைகளை சமாளிக்கும் பொருட்டு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவை இரண்டும் புதிது புதிதாக பல மாற்றங்களை தமது தளத்தில் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பேஸ்புக் தற்போது தனது தளத்தில் புதிய மாற்றமொன்றை கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் டுவிட்டரை ஒத்த மாற்றமொன்றை பேஸ்புக் பாவனையாளர்கள் விரைவில் காணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆம், டுவிட்டரில் பரவலாக உபயோகப்படுத்தப்படும் 'ஹேஸ்டெக்' (#)முறை விரைவில் பேஸ்புக்கிலும் பாவனைக்கு வரவுள்ளது. தனது தளத்திலும் உரையாடல்களை ஊக்குவிக்கும்பொருட்டு இம்முடிவை பேஸ்புக் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஒரு விடயம் தொடர்பான ஹேஸ்டெக்கினை கிளிக் செய்வதன் ஊடாக அது தொடர்பில் மற்றையோரின் கருத்து என்ன என்பதனை தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும். இதன்மூலம் தனது தளத்தில் பாவனையாளர்களை அதிக நேரம் வைத்திருக்க பேஸ்புக் எதிர்ப்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டபடுகின்றது.
வேறு சில வலையமைப்புகளிலும் ஹேஸ்டெக் பாவனியிலுள்ள போதிலும், டுவிட்டரைக் கருத்தில் கொண்டே இதனை பேஸ்புக் தனது வலையமைப்பில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த சில காலங்களாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் போட்டியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அவற்றில் ஒன்றே இது என தெரிவிக்கப்படுகின்றது.


நன்றி:http://www.seithy.com