Home » » திருமண பந்தங்கள் முறிவதற்கான காரணங்கள்!!

திருமண பந்தங்கள் முறிவதற்கான காரணங்கள்!!

திருமணம் என்பது இருமனம் இணையும் அற்புதமான பந்தம். இறுதிவரையிலும் இணைந்திருப்போம் என்ற உறுதியுடன் இரண்டு உள்ளங்கள் இணைந்து இல்வாழ்க்கை என்னும் இனிய பயணம். ஏமி ஃபுளூம் என்பவர் திருமணத்தைப் பற்றிப் " திருமணம் என்பது ஒரு சடங்கும் அல்ல, ஒரு முடிவும் அல்ல!!. இரண்டு ஆத்மார்த்தமான உண்மையான உள்ளன்புடன் கூடிய நீண்டதொரு நடனம்!. அந்த நடனத்தில், இருவரும் எவ்வாறு அந்த நடனத்தை ஒத்த மனத்துடன் பேலன்ஸ் செய்து ஆடுகிறோம் என்பது தான் முக்கியம். மற்ற எதுவும் அல்ல." என்று கூறுகிறார். சட்டத்தின்படியும், மதக் கோட்பாடுகளின் படியும், திருமணம் என்பது இரண்டு தனி நபர்களுக்கிடையேயான மனம் ஒத்த உறவு ஆகும். அது சட்டபூர்வமானது. இவ்வுறவானது, தேன் நிலவின்போது, மிக நெருக்கமானதாகவும், ஆழமானதாகவும் மாறுகிறது. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடி மீது தலை சாய்த்தும், காதலைப் பரிமாறி, இன்பமான தருணங்களை அனுபவித்து, உடலும் உள்ளமும் இதுவரை கண்டிராத இன்பங்களைத் திகட்டத் திகட்ட அனுபவித்து, கனவு உலகத்தில் உலவி.... கணவனும் மனைவியுமாக நிஜ வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையை நடத்தத் தொடங்கும் பொழுது தான் வாழ்க்கையின் எதார்த்தம் புரியத் தொடங்குகிறது. அதன் பின் என்ன நடக்கிறது தெரியுமா? ஏன் சிலரின் மண வாழ்க்கை கசக்கிறது? ஏன் பல திருமணங்கள் தோல்வியடைகிறது? இதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும்? திருமணத்திற்கு முன்பாக இருவரும் பழகியபோது, குறையாகக் கண்டுகொள்ளாத, பெரிதாகத் தோன்றாத, முக்கியத்துவம் அளிக்காத ஏதோ ஒன்றாகத் தான் அது இருக்கும். அதைப் பற்றிய அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். காதல் மோகம் கண்களை மறைத்திருக்கும். யாருடைய அறிவுரையும் காதில் விழுந்திருக்காது. காதல் ஜோடிகளின் வாழ்வில் இத்தகைய தருணங்களை ஏற்படுத்தும் இதுபோன்ற காரணங்கள் சிலவற்றைப் பற்றி இப்போது அறிந்துகொள்வோம்.

மாற்றங்கள்

திருமணத்திற்கு முன்னர் இருந்த இரண்டு தனி நபர்களுக்கு வெவ்வேறு எண்ணங்கள், கருத்துக்கள், கொள்கைகள் என இருந்திருக்கும். திருமணத்திற்குப் பிறகு அவர்களது கருத்துகளும் கொள்கைகளும் மாற வேண்டியது அவசியமில்லை. இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தெரியாத தம்பதிகளின் மண வாழ்க்கை தவறாகப் போகத் தொடங்கும். இங்கு தான் உறுதியற்ற உறவின் தொடக்கம் ஆரம்பமாகிறது.

புரிதலின்மை

ஒவ்வொரு உறவும் சிறப்பாக வளர நல்ல புரிதல் அவசியம். வாழ்க்கைத்துணைவரது செயல்கள் ஒவ்வொன்றினையும் குற்றமாகப் பார்க்கும் போது, அங்கே புரிதலின்மை ஆரம்பமாகிறது. இதன் விளைவாக தவறாகப் புரிந்து கொள்ளுதல் உருவாகிறது. அது உறவில் விரிசலை உண்டாக்குகிறது.

தொடர்பின்மை

தம்பதிகளுக்கிடையே சரியான தகவல் தொடர்பு இருக்க வேண்டும். தாம் நினைத்ததை சரியாக மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டும் அல்லது சரியாகத் வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். (நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!) சரியான தகவல் தொடர்பின்மையால் 50% திருமணங்கள் தோல்வியடைகிறது. சிறு சிறு பிரச்சனைகள், மனதில் உள்ள உணர்வுகளை மற்றவருக்கு வெளிப்படுத்த போதிய தொடர்பின்மையால், தீர்க்க முடியாத அளவிற்குப் பூதாகரமாகின்றன. ஒவ்வொருவரும் மற்றவரின் உணர்வுகளுக்கும், கனவுகளுக்கும், எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து, பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.

நம்பிக்கையின்மை

ஒவ்வொரு உறவும் நீடித்து வளர அடிப்படையான தேவையாக இருப்பது நம்பிக்கை. பெற்றோர்-குழந்தைகள், ஆசிரியர்-மாணவர், கணவன்-மனைவி ஆகிய உறவுகளில் இருக்க வேண்டியது நம்பிக்கை. இந்த நம்பிக்கையினை மெதுவாக, உறுதியாக வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். உறவுகளுக்கிடையே ஏதாவது பிரச்சனை தோன்றினால் உடனடியாக தீர்க்க வேண்டும். தாமதம் செய்தால், உறவுகளுக்கிடையே நம்பிக்கையினை இழக்க நேரிடும். நம்பிக்கை இழந்தால், அனைத்தும் இழந்ததாக அர்த்தம். பின்பு அந்த உறவில் மிச்சம் ஏதும் இருக்காது.

பொருத்தம்

ஒருவருக்கொருவர் ஏற்றவர்களாக, பொருத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்கு லியோ டால்ஸ்டாயின் கூற்று: "உங்களது மணவாழ்வின் மகிழ்ச்சியின் அளவை நிர்ணயிப்பது, நீங்கள் எவ்வளவு பொருத்தமுடன் இருக்கிறீர்கள் என்பதல்ல. உங்களது பொருத்தமின்மையை எவ்வளவு வெற்றிகரமாக எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்தது".

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான மந்திரம்

நாம் அடிக்கடி கேள்விப்பட்டது போல், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கான அடிப்படைப் பணிகள் பூலோகத்தில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். வெற்றிகரமான மணவாழ்விற்கு பின்வருமாறு மூன்று எஃப் (F) களை நினைவில் கொள்ளுங்கள். "F"riendship - நட்பு "F"reedom - சுதந்திரம் "F"orgiveness - மன்னித்தல் வாழ்க்கைத்துணைவருக்காக வாழ்கிறோம் என்பதை நினைவில் வைப்பதோடு, அவரின் நண்பராக, பரஸ்பர சுதந்திரம் அளித்து, மற்றவரின் தவறுகளை மன்னிக்கத் தயாராக இருங்கள். எந்த உறவிலும், மற்றவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள். மற்றவரிடமிருந்து எதிர்பார்ப்பதை விட அவருக்கு அதிகம் கொடுக்கத் தயாராக இருங்கள். இவ்வாறெல்லாம் இருந்தால், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்.நன்றி:http://tamil.boldsky.com/