Home » » புடவைகள் A to Z

புடவைகள் A to Z

sarees A to Zஎன்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலும், தழையத் தழைய புடவை கட்டிக்  கொண்டு ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஈருடல்  ஓருயிராக மாறியிருக்கிறது புடவை.

‘‘ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இந்த உடை இருந்ததற்கான ஆதாரங்கள்  கிடைத்திருக்கின்றன...’’ என்றபடி புடவை உருவான வரலாறு குறித்தும், அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியும் பேச ஆரம்பித்தார் உடை  அலங்கார நிபுணர் தபசும்.

‘‘சிலப்பதிகாரத்திலும் புடவை இருந்திருக்கிறது. பெண்களின் தொப்புள் பகுதி ஓருயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்ககாலப் பெண்கள்,  தொப்புள் தெரியும்படி புடவைகளை அணிந்து வந்தனர். பிறகு தர்ம நூல்கள், இப்படி அணியக் கூடாது என்ற மரபை தோற்றுவித்ததும், இடுப்பை  மறைத்தபடி பெரிய ஜாக்கெட், அதன் மேல் புடவைகள் என பெண்கள் உடுத்த ஆரம்பித்தனர்.

புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். மகாராணி இந்திரா தேவிதான் ஷிபான்  புடவைகளை அறிமுகம் செய்தார். இளம் வயதிலேயே விதவையான இவர், வெள்ளை புடவை மட்டுமே அணிந்து வந்தார். பிரான்சிலிருந்து  இறக்குமதியான இந்தப் புடவை அழகான டிசைன்களுடன் காட்சியளித்தது.

ஷிபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில் காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர். திரைப்படங்கள் வெளிவர  ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. எனவே ஃபேஷன் டிசைனிங் துறையும் வளர்ந்தது. சுருக்கமாக இந்தி சினிமாதான்  புடவைகளின் வகைகளை பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம்...’’ என்று சொல்லும் தபசும், புடவையின் முன் பாதிதான் பாவாடை தாவணி  என்கிறார்.

‘‘கவுன், பேன்ட், ஸ்கர்ட் எல்லாம் இன்றைய வடிவங்கள். ஆரம்பத்தில் பருவம் அடையும் வரை பெண்கள் பாவாடை, சட்டைதான் அணிந்து வந்தார்கள்.  பருவம் எய்திய பிறகு, இதுவே பாவாடை, தாவணியானது. இன்று பாவடை, லாங் ஸ்கர்ட், பிஷ்கட் ஸ்கர்ட், ஏ லைன் ஸ்கர்ட் என்று மார்டனாக  மாற்றியுள்ளது. அதே போல் தாவணியும் ஸ்டோல், ஸ்கார்ப் என உருமாறியுள்ளது. மற்ற உடைகளை போல் பாவாடை தாவணியிலும் எம்பிராய்டரி,  சம்கி வேலைப்பாடுகள் இப்போது செய்யப்பட்டு வருகின்றன...’’ என்று சிரித்தவர், புடவைகளில் இருக்கும் வகைகளை பட்டியலிட ஆரம்பித்தார்.

‘‘டெனிம் புடவை, பார்க்க டெனிம் துணி போலிருக்கும். ஆனால், பட்டு துணியால் நெய்யப்பட்ட புடவை இது. ரவிவர்மனின் ஓவியங்களை வைத்து  உருவானது ஹம்ச தமயந்தி புடவை. இடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக்  கட்டுவது ரிவர்சபிள் புடவை. ஜாக்கெட்டிலும் புடவையிலுள்ள டிசைன்களை அமைத்தால், அது ஷர்ட் காம்போ. இதை கல்யாண கலெக்ஷன் என்றும்  அழைக்கலாம்.

ஒரு புடவை, இரண்டு பிளவுஸ் பிட்ஸ் என்றிருப்பவை மா பேட்டி புடவை. அம்மா பெண் இருவரும் இதனை அணியலாம். இப்படி காலத்துக்கு ஏற்ப  நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன...’’ என்றவர், புடவையை அணிவதிலும் பல வகைகள் இருப்பதாக சொல்கிறார்.‘‘சாதாரணமாக எல்லா பெண்களும்  கட்டுவது நிவி ஸ்டைல். இதிலேயே முந்தானையை வலது பக்கமாக முன்னால் கொண்டு வந்தால், அது குஜராத்தி ஸ்டைல்.

ஆண்களின் பஞ்சகச்சம் போல் கட்டப்படுவது கொங்கினி. பிராமண சமுதாயத்தில் அணியும் ஸ்டைல், மடிசார். பொதுவாக கொசுவம் முன்னால் வரும்.  அதையே பின்னால் வருவது போல் அணிந்து முந்தானையை குஜராத்தி ஸ்டைலில் கொண்டு வந்தால், அது குடகு ஃபேஷன்.இப்படி மாநிலத்துக்கு  மாநிலம் புடவை கட்டும் ஸ்டைல் மாறுபடுகிறது.

இதையே கலந்துக் கட்டி புதிது புதிதாக ஸ்டைல்களை உருவாக்கி வருகிறார்கள், ஃபேஷன் டிசைனர்கள். கல்யாணம், பார்ட்டி என அந்தந்த  விசேஷங்களுக்கு தகுந்தபடி புடவை அணிந்தால் எடுப்பாகவும், அழகாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.ஆனால், அவரவர் உடல் வாகுக்கு தகுந்தபடிதான்  புடவை அணிய வேண்டும். குண்டாக இருப்பவர்கள், மெல்லிய துணியாலான புடவைகளை கட்டலாம்.

இது அவர்களது உடல் எடையை குறைத்துக் காட்டும். அதே போல் ஒல்லியாக இருப்பவர்கள் திக்கான புடவைகளை கட்டினால், பூசினாற் போல்  தெரிவார்கள்...’’ என்ற தபசும், புடவைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் தருகிறார்.
   
டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும்.
ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் பந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
உடையின் மேல் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, கரையாகும்.
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். அதே போல் நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.
ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.
நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.
சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்ட பகுதியில் துடைத்தால் கரை மறையும்.
புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்துக் கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.


நன்றி:http://www.dinakaran.com/