Home » » பல்லிலே பல்வேறு பிரச்னை!

பல்லிலே பல்வேறு பிரச்னை!

If the tooth is not going to tell me ... Beautiful, healthy, youthful appearance ... How much more is this ... Various issues affecting women in most dental exempt
பூப்பெய்தும் பருவத்திலே...

ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருப்பதால் இந்தப் பருவத்தில், பெண்களின் ஈறுகள் மிக மென்மையாக மாறி, ஈறு தொடர்பான நோய்கள்  வரலாம். உணவிலுள்ள பாக்டீரியா தாக்கத்தின் காரணமாக, ஈறுகள் வீங்கும். பல் மருத்துவரிடம் அதை முறையாக சுத்தம் செய்து கொள்வதோடு,  தினம் சரியான முறையில் பிரஷ் செய்வதும், ஃபிளாஸ் செய்வதும் அவசியம். கவனிக்காமல் விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளும்  திசுக்களும் பாதிக்கப்படலாம்.

மாதவிலக்கினிலே...

ஈறு அழற்சி (நிவீஸீரீவீஸ்வீtவீs)   எனப்படுகிற பிரச்னை இந்த நாள்களில் மிகவும் சகஜம். ஈறுகள் சிவந்து, வீங்கி, மென்மையாகி இருக்கும். புரொஜெஸ்ட்ரோன் எனப்படுகிற ஹார்மோனின் அதீத சுரப்புதான் இதற்குக் காரணம். சில பெண்கள் மாதவிலக்குக்கு 3-4 நாள்களுக்கு முன், ஈறுகளில் ரத்தம் கசிவதை உணர்வார்கள். க்ளிப் அணிந்திருந்தாலோ, ஞானப்பல் முளைக்கத் தொடங்கியிருந்தாலோ இந்த இம்சை இன்னும் அதிகமாக இருக்கும்.  இது மாதவிலக்குக்கு முன்பு வந்து, அது முடிந்ததும், தானாகச் சரியாகி விடும். முறையான பல் பராமரிப்புதான் இதற்கும் அறிவுறுத்தப்படும்.  தேவைப்பட்டால், பல் மருத்துவரிடம் கேட்டு, ஆன்ட்டிமைக்ரோபயல் மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.

கர்ப்ப காலத்திலே...

ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது  மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (ஜீக்ஷீமீரீஸீணீஸீநீஹ் ரீவீஸீரீவீஸ்வீtவீs)   என்று பெயர்.  ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும். கவனிக்கப்படாவிட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தலாம். பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம்.

முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை  அதைத் தள்ளிப் போடலாம். நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.  டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட  வேண்டும்.  எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித  அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால்,  மருத்துவரிடம் கேட்டு, சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.

கருத்தடை மாத்திரைகளிலே...

கருத்தடை மாத்திரைகளில் உள்ள ஹார்மோன்கள், பெண்களின் உடலில் புரொஜெஸ்ட்ரோன் அளவை அதிகரிக்கும். அதன் விளைவால் சின்னச் சின்ன  விஷயங்களால்கூட ஈறுகள் வீங்கி, ரத்தம் கசியும். கருத்தடை மாத்திரைகள் உண்டு பண்ணும் இந்தப் பக்க விளைவுகளைக் குறைக்க மருந்துகள்  உள்ளன. கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கு, பல் நீக்கிய பிறகு அந்தப் புண் ஆறுவதிலும் தாமதம் இருக்கும். அதை பல் மருத்துவரிடம்  சிகிச்சைக்குச் செல்லும்போதே சொல்ல வேண்டும்.

மெனோபாஸ் பருவத்திலே...

இந்தக் காலத்திலும் ஹார்மோன் மாற்றங்களின் பாதிப்பு தொடரும். ஈஸ்ட்ரோஜென் குறைபாடு காரணமாக, பற்களைத் தாங்கிப் பிடிக்கிற எலும்பு  பலமிழக்கும். பற்கள் விழும்.

மெனோபாஸ் காலத்தில் இருக்கிற பெண்களுக்கு...

உமிழ்நீர் சுரப்பு குறைந்து, வாய் உலர்ந்து, எரிச்சல் இருக்கும். பல் இழப்பு அதிகரிக்கும். அசாதாரணமான ருசி உணர்வு இருக்கும். ஈறுகள் வீங்கி, வலி  மற்றும் ரத்தக்கசிவுடன் இருக்கும். வாய் துர்நாற்றமும், பற்களுக்கு இடையில் சீழ் வடிதலும் இருக்கும். தாடைப் பகுதியில் உள்ள தாதுக்களின்  அடர்த்தி குறைந்து, அந்தப் பகுதி எலும்புகள் பலமிழக்கும். பல் மருத்துவரை அணுகி, அவசியமான சோதனைகளை மேற்கொள்வதுடன், அவரது  அறிவுரையின் பேரில் தேவைப்பட்டால், தகுந்த நிபுணரிடம் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

1 முன் பற்களை கீழ் அசைவில், 45 டிகிரியில் பிரஷ்ஷை ஏந்தி, பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
2 பின் பற்களை மெதுவாக மேலும், கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும்.
3 கீழ் கடவாய் பற்களை உள்புறமாக மேல், கீழ் அசைவோடு சுத்தம் செய்ய வேண்டும்.
4 மேல் மற்றும் கீழ் முன் பற்களை உள்ளிருந்து, வெளியே பிரஷ் செய்ய வேண்டும்.
5 கடவாய் பற்களின் மேல் பகுதியை முன்பின் அசைவோடு மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.
6 இறுதியாக நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுப் பொருள்களை அகற்ற மற்றும் துர்நாற்றம் ஏற்படாமலிருக்க பிரஷ் செய்ய
வேண்டும்.

விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை. வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட்  இருந்தாலே போதும். பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும். பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால்,  ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும். ஆக்ரோஷமாக, அதிக அழுத்தத்துடன்  தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும். எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.  3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். வாய்துர்நாற்றம்  இருப்பவர்கள், பற்களில் கூச்சம் இருப்பவர்கள், ரத்தம் கசிவதை உணர்பவர்கள் எல்லாம், பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், பிரத்யேக  பற்பசை மற்றும் மவுத்வாஷ் உபயோகிக்கலாம்.

குழந்தைக்கு உதடு மற்றும் அண்ணப்பிளவு ஏற்படக் காரணங்கள்?

கர்ப்பமாக இருக்கும் போது சிகரெட் பிடிப்பது, புகையிலை போடுவது, சட்டத்துக்குப் புறம்பான தடைசெய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வது...
வலிப்பு, புற்றுநோய், ஆர்த்ரைடிஸ் மற்றும் டிபி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்கிற ஸ்டீராய்டு கலந்த மருந்துகளாலும், குழந்தையின் முக அமைப்பு  பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி, கன்னாபின்னாவென எடுத்துக் கொள்ளும் ஆபத்தான மருந்துகளும் இதற்குக் காரணம்.

கர்ப்பம் தரித்தது தெரியாமல், கர்ப்பத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கலாம்.
வயது கடந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் துத்தநாகக் குறைபாடுள்ள  பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அண்ணப்பிளவு பாதிக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

தினம் தினம் கவனம்!

வருடம் தவறாத பல் பரிசோதனை, பல் தொடர்பான எந்தப் பிரச்னையும் பெரிதாகாமல், ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட உதவும். வருடம் ஒரு  முறை அல்லது 2 முறைகள் பற்களை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
தினம் 2 முறை பல் துலக்குகிற அடிப்படை சுகாதாரம் அவசியம்.
 பற்களின் இடையில் ஃபிளாஸ் எனப்படுகிற பிரத்யேக நூல் வைத்து சுத்தம் செய்கிற பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
சரிவிகித சாப்பாடு அவசியம்.
புகைப்பழக்கம் வேண்டாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்றால், பல் பரிசோதனையின் போது அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பல்லுக்கும் இதயத்துக்கும் தொடர்புண்டா?

உண்டு என்கிறது அறிவியல். பல் ஆரோக்கியத்தை நல்லபடியாகப் பராமரிக்கும் பெண்களுக்கு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைவாம். வாய்  வழியே ரத்தத்தினுள் கலக்கும் தொற்றின் காரணமாக உண்டாகக்கூடிய இதய நோய்களைத் தவிர்க்க, வாய் மற்றும் பற்களை சுத்தமாகப் பராமரிப்பது  ஒன்றே வழி.




நன்றி:http://www.dinakaran.com/