Home » , » சிவப்பழகு கிரீம் உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் வருமா?

சிவப்பழகு கிரீம் உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோய் வருமா?

தோல் அழகுக்காக பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிவப்பழகு கிரீம்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் கலந்துள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்கள் தங்களின் தோல் அழகுக்காக சந்தையில் கிடைக்கும் பலவகை கிரீம்களை அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் இந்த கீரிம்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. தோலுக்கு சிவப்பு நிறம் தரும் இவ்வகை கிரீம்களில் பலவித ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் தரத்தை ஆராயும் வகையில் சந்தையில் பிரபலமாக உள்ள 14 வகை கிரீம்களை அண்மையில் ஆய்வு செய்தது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரியவருவது:

கிரீம்களின் பிசுபிசுப்புத் தன்மை உள்ளிட்ட தரக் குறியீடுகள், அவற்றில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களின் அளவு, அவற்றுக்குள் உள்ள நுண்ணுயிரிகள், கிரீம்களை பாக்கெட் செய்துள்ள விதம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், அழகு சாதன கிரீம்கள் அனைத்திலும் மார்பக புற்றுநோயை உருவாக்கக்கூடிய பேராபென்ஸ் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதும் தோல் புற்றுநோய், நரம்பு மற்றும் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும் ஈயம், பாதரசம், ஆர்சனிக் போன்ற வேதிப்பொருள்களின் சேர்க்கை குறித்த தகவல் பெரும்பாலான கிரீம்களின் லேபிள்களில் இடம் பெறாததும் தெரிய வந்துள்ளது.

தோல் அழகு கிரீம்களில் இந்த வேதிப்பொருள்கள் அரசு நிர்ணயித்துள்ள அளவுக்குள் சேர்க்கப்பட்டாலும், இவற்றின் கடுமையான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, கிரீம்களில் இவற்றின் பயன்பாட்டை தவிர்க்கவோ அல்லது மாற்றுப் பொருள்களைச் சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் கிரீம்களை உபயோகிப்பதால் தோல் அழகாகிறது என்பதை மருத்துவரீதியாக நிரூபிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.