Home » » புகை பிடித்தால் முதுகுவலி வரும்

புகை பிடித்தால் முதுகுவலி வரும்

புகைபிடிப்பதால் புற்றுநோய் உண்டாகும்” என மக்களிடையே பல்வேறு வித விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிகரெட், பீடி உள்ளிட்ட  புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் கல்லீரல் மற்றும் இதயம், மூளை, நரம்பு உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு பெருமளவில் பாதிப்பு  ஏற்படுகிறது.ஆனால் இதுகுறித்து மக்களிடையே எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த  வண்ணமே உள்ளது. இந்நிலையில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படும் என சமீபத்தில் நியூயார்க் நகரின் தென்மேற்கு  பல்கலைக்கழக பெயின்பெர்க் மருந்தகப்பள்ளி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அண்மையில் இளம்வயதினருக்கு முதுகுவலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்குரிய காரணங்கள் குறித்து இப்பல்கலைக்கழகம் ஆய்வு  நடத்தியது. இதில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் மற்றும் அதிகநேரம் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களை காட்டிலும்  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு முதுகுவலி பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 160 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில்  ஒவ்வொருவரின் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஏற்ப அவர்களின் முதுகுவலி பாதிப்பும் மாறுபட்டிருந்தது. இதே போல ஆய்வின் போது,  புகைப்பிடிக்காமல் இருந்தவர்களுக்கு முதுகுவலி குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இது தவிர மூளையில் இருந்து கழுத்து மற்றும் முதுகு  தண்டுக்கு செல்லும் நரம்புகள் புகைப்பிடிப்பதால் பாதிப்படைகிறது.

இதனாலேயே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெயின்பெர்க்  மருந்தகப்பள்ளியின் ஆய்வாளர் போக்டன் பெட்ரி கூறுகையில், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை நரம்புகள் பாதிக்கும் வாய்ப்புகள்  அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் நினைவாற்றல், தூண்டுதல் ஆற்றல் ஆகியவை படிப்படியாக குறைகிறது. புகைப்பிடிப்பதனால் மூளை நரம்புகள்  பலவீனமடைகிறது.

இதனால் மனித உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு கட்டளையிடும் நரம்புகள், அதன் செயல்பாடுகளை துரிதமாக செய்ய இயலாத சூழ்நிலை  ஏற்படுகிறது. இதன் விளைவாக நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. நரம்புகளின் பலவீனத்தால் மனித உடலில்  எலும்புகள் அதிக செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இதனால் விரைவில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, முதுகுவலி, மூட்டு வலி போன்ற பாதிப்புகள்  ஏற்படுகிறது என்றார். முதுகுவலி உள்ளவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், பாதிப்பில் இருந்து மீள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.