Home » » சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி

சர்க்கரை நோயாளிகளுக்கு எமனாகும் பொன்னி அரிசி

தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில்  ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை  கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு  புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது  என்று கூடி பேசுவோர் மற்றொரு பக்கமும் நின்று பட்டிமன்ற பாணியில் விவாதித்து வருகின்றனர்.சர்க்கரை நோயை பற்றி சமீபத்திய ஆய்வு ஒரு  தகவல் கூறியுள்ளது. அதை பார்ப்போம்...

ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை  கணக்கிடுவதற்கு கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்று பெயர். சுருக்கமாக ஜிஐ (GI ). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் ஜிஐ 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள். 100-70 வரை ஜிஐ உள்ள உணவுகளை, அதிக ஜிஐ என்றும், 70-55 வரையிலான உணவுகளை நடுத்தர ஜிஐ என்றும், 55க்கு கீழே உள்ள உணவுகளை, குறைந்த ஜிஐ என்றும் அழைக்கிறோம்.

அதிக ஜிஐ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரித்து, சர்க்கரை நோய்  வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த ஜிஐ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை  கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துகின்றன. ஆகவே, 70க்கும் மேல் ஜிஐ உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55க்குக் கீழ் உள்ள உணவுகளே  பாதுகாப்பானவை.

அப்படியானால், நாம் உண்ணும் உணவின் ஜிஐ எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்..! வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப்  பண்டத்தின் கவரிலும் ஜிஐ அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது. இங்கு அப்படி கிடையாது. இதில் நாம் கவனிக்க வேண்டியது  கைக்குத்தல் அரிசியின் ஜிஐயை தான். கைக்குத்தல் அரிசிக்கு வெறும் 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் ஜிஐ அளவு மிகவும்  அதிகம். அதாவது 75.

நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) ஜிஐ இடைப்பட்ட ரகம்: 56-58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும்  நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் பொன்னி அரிசிதான்  வேண்டும் என்கிற நம்முடைய பிடிவாதம் சரியா... இல்லையா... என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் ஜிஐ மட்டுமல்லாமல்... சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity) கூட  கணக்கிடப்படுவது முக்கியம் என்கிற கருத்தும் உண்டு. இதை கிளைசீமிக் லோடு (GlycemicLoad) என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக ஜிஎல்  (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில்  மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய குளுக்கோஸ் சுமை அதிகம் தானே? அதிக ஜிஐ  இருக்கும்போது, அதிக ஜிஎல்லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?

நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை நாம் மறந்ததே பல்வேறு பிரச்சினைகளுக்கு திறவு கோளாக உள்ளது. கேப்பை, கம்பு போன்ற உணவுகளை மறந்து  நோய் வந்தவுடன் அதனை மருந்தாக உண்கிறோம். அது போன்றே பொன்னி அரிசி சாப்பிடுவது பெருமை என்று நாம் எண்ணி வருகிறோம். ஆனால்  அதனால் வரும் ஆபத்தை உணர வேண்டும். உணர தயாராகி விட்டீர்கள் அப்படித்தானே..!


நன்றி:http://www.dinakaran.com