Home » » தும்மல் வர காரணங்கள்

தும்மல் வர காரணங்கள்

அலர்ஜி

பலருக்கு இதற்கான காரணம் தெரியாது. வந்து போன பின்பு அது குறித்த எண்ணமும் இருக்காது. விடுகதை போடவில்லை... தும்மலைப் பற்றித்தான் சொல்கிறோம். சிலருக்கு குளிர்ந்த நீரில் கை வைத்தாலே தொடர்ந்து தும்மல் போடுவார்கள்.
இன்னும் சிலருக்கு பூக்களின் வாசனை கூட ஆகாது. தும்மியே மூக்கும் முகமும் சிவந்து போனவர்களும் உண்டு. தும்மல் என்பது நம் உடலுக்குச் சேராத அந்நியப் பொருட்களை வெளியேற்றும் ஒரு செயல். வர வேண்டிய நேரத்தில் தும்மல் வராமல் இருப்பது கூட ஒரு நோய்தான் என்கிறார்கள் மருத்துவர்கள். அதே நேரத்தில் தொடர்ச்சியான தும்மலும் அலட்சியப்படுத்தக்கூடாதது என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு நிபுணர் டாக்டர் ஜரீன் முகமத்.

‘‘ரைனிடிஸ் (Rhinitis) என்னும் பிரச்னைதான் தும்மல் வருவதற்கான மூலகாரணம் ஆகும். மூக்கினுள் உள்ள மியூகஸ் சவ்வில் அழற்சி ஏற்படுவதால் ரைனிடிஸ் வருகிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், கண்களில் எரிச்சல், காதுகளில் வலி போன்றவை இருக்கும். தும்மலும் இதில் அடக்கம். இரண்டு வகை ரைனிடிஸ் உண்டு. ஒன்று அலர்ஜியால் ஏற்படுவது (Allergic rhinitis), மற்றொன்று அலர்ஜி அல்லாமல் ஏற்படுவது(Non allergic rhinitis). ஒருவருக்கு அடிக்கடி ரைனிடிஸ் வந்தால் காலப்போக்கில் அவருக்கு சைனஸிடிஸ் (Sinusitis) மற்றும் காதுகளில் நோய்த்தொற்றும் ஏற்படலாம். ஆனால், அதிகப்படியான நபர்களுக்கு அலர்ஜி ரைனிடிஸ் விளைவாகத்தான் தொடர்ந்து தும்மும் பிரச்னை ஏற்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் இவர்களுக்கு தும்மல் ஆரம்பிக்கும். காதுகளில் வலியும், கண்களில் நீரும் வடியும். சிலருக்கு இதனால் காய்ச்சல் கூட வரும். மழை மற்றும் குளிர் என குறிப்பிட்ட காலநிலையில் மட்டும் சிலருக்கு தும்மல் வரும். இதற்கு ‘சீசனல் ரைனிடிஸ்’ என்று பெயர். மரம், செடி, பூக்களில் உள்ள மகரந்தங்களின் வாசனை, வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை இவற்றில் இருந்து வரும் நாற்றம், அவற்றின் முடிகள் ஏற்படுத்தும் அலர்ஜியால் தும்மல் வரலாம். அலுவலகத்தில் உள்ள மரத்தூசு, கரப்பான் பூச்சிகள், பழைய பேப்பர் வாசனை போன்றவையும் அலர்ஜியை ஏற்படுத்தி தும்மலை வரவழைப்பவை. டஸ்ட் மைட்ஸ் எனப்படும் பூச்சிகள், அழுக்கு சேர்ந்த தலையணை உறைகள், பெட்ஷீட், மெத்தைகள் போன்றவற்றில் உருவாகும்.

இந்தப் பூச்சிகளும் அலர்ஜியை உருவாக்கி தும்மலை வரவழைக்கும். கொசுக்கடி கூட சிலருக்கு தும்மலை ஏற்படுத்தலாம். தும்மலின் தீவிரத் தன்மையை பொருத்தே சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவருக்கு தும்மலால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் அவர் உடனடியாக அலர்ஜிக்கான சிறப்பு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து சரி செய்து கொள்ள வேண்டும். நறுமண திரவத்தின் வாசனை சேராமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசு, வாகன புகை, சேராத மருந்துகளை உபயோகிக்கும் போதும் தும்மல் வரும். கார உணவுகள் தும்மலை ஏற்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகள் கூட தும்மலை கொண்டுவரும்.

இவையெல்லாம் அலர்ஜி அல்லாத ரைனிடிஸ் ஏற்படுத்தும் விளைவுகள். பரம்பரை ஜீன்கள் மூலமும் தும்மல் பிரச்னைகள் வரும். பரம்பரையில் முன்னோர் யாருக்கும் இருந்தாலும் சந்ததியினருக்கு தொடர் தும்மல்கள் வரும். பொதுவாக பேச்சிலர் அறைகளில் ஐந்தாறு நபர்கள் தங்கி இருப்பார்கள். துணிமணிகள், படுக்கை விரிப்புகள் பலநாட்கள் துவைக்காமல் கிடக்கும். அதில் ஒரு நபருக்கு மட்டும் ரைனிடிஸ் பிரச்னை வந்து தும்மி அவதிப்படுவார். தங்கியிருக்கும் மற்ற நபர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. இதற்கு பரம்பரை வழியே காரணமாகும். அலர்ஜியால் தும்மல் ஏற்படுபவர்களுக்கு ஸ்கின் ஃப்ரிக் டெஸ்ட் செய்வோம்.

அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகள் பல சிறிய புட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கும். அதில் ஒவ்வொன்றையும் அவர்களின் சருமத்தில் சிறிய அளவு விட்டுப் பார்ப்போம். எந்தக் காரணி அவர்களது தோலை சிவப்பு நிறமாக மாற்றுகிறதோ அது அலர்ஜியை ஏற்படுத்தும் காரணியாகும். அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிக்கு எதிரான தடுப்பு மருந்து கொடுத்து நிரந்தரமாக அந்த அலர்ஜி ஏற்படாமல் செய்துவிடலாம். இப்படி ஒவ்வொரு அலர்ஜிக்கும் எதிரான தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலர்ஜி வாக்ஸின்களும் பயனளிக்கின்றன...’’ - தும்மலை கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்லும் டாக்டர் ஜரீன் முகமத் வராமலிருக்கும் வழிகளையும் கூறுகிறார்.

‘‘அழுக்குத் துணிகளை சேரவிடக் கூடாது. படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுடு தண்ணீரில் அலசி காய வைக்க வேண்டும். வீட்டில் உள்ள மெத்தைகள், குஷன்களை மாதம் ஒருமுறையாவது வெயிலில் காய வைக்க வேண்டும். சோபா, டி.வி., லேப்டாப், போன் போன்ற பொருட்களில் தூசி சேரவிடக்கூடாது. காரமான உணவுகள், விரைவு உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்பவர்கள் NIOSH 95 (டஸ்ட் மாஸ்க்) மாஸ்க் அணிந்து ஓட்டுவது நலம். குளிர்காலங்களில் சுடு தண்ணீரில் குளிப்பது நல்லது. உடலுக்கு சேராத நறுமண புட்டிகளை உபயோகப்படுத்துவதை தவிர்க்கவும். அலுவலகத்திலும் தூசிகள், பூச்சிகள், கொசுக்கள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  வளர்ப்புப் பிராணிகளை அடிக்கடி குளிக்கச் செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவற்றின் முடிகள் வீட்டில் தூசு போல சேராமல் சுத்தப்படுத்த வேண்டும்...’


நன்றி:http://www.dinakaran.com