Home » » இளம் வயது இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சுவதற்கான காரணங்கள்!

இளம் வயது இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சுவதற்கான காரணங்கள்!

20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.
பல இந்திய திரைப்படங்கள் இன்றளவும் காட்டுவதை போல், திருமணம் செய்வதையே தங்களின் வாழ்க்கை குறிக்கோளாக இன்னமும் பல இந்திய பெண்கள் வைத்திருப்பதில்லை. மாறாக பல இந்திய பெண்களும் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி போடவே விருப்பப்படுகிறார்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது என்ற கேள்வி எழலாம். வெறுமனே தாராளமயமான சமுதாயம், நிதி சார்ந்த சுதந்திரம் போன்றவைகள் மட்டுமே இதற்கு காரணம் கிடையாது.

இவைகள் மட்டுமே பெண்களின் மனதை அப்படி மாற்றவில்லை. இதையும் தாண்டி பல விஷயங்கள் உள்ளது. ஆம், திருமணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் தான் அது. அதை எண்ணி அவர்கள் கவலை கொண்டிருப்பதாலே தான் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். என்ன ஒத்துக் கொள்ள முடியவில்லையா? சரி, அப்படியானால் திருமணம் என்றால் ஏன் இன்றைய இளம் இந்திய பெண்கள் பயம் கொள்கிறார்கள் என்பதற்கான செயல் காரணங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

சுதந்திரம் பரி போய் விடும்

தனியாக இருக்கும் வரை தான் தாங்கள் நினைத்ததை எல்லாம் சுதந்திரமாக பெண்களால் செய்ய முடியும். திருமணத்திற்கு பிறகு இந்த நிலை அடியோடு மாறி விடும். தங்கள் கணவன் அல்லது மாமனார் மாமியார் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்திலேயே அவர்களின் பாதி திட்டங்கள் கனவாகவே போய் விடும். திருமணத்தைப் பற்றி பயம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.

பெரிய மாற்றம்

நம்மில் பல பேருக்கும் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். தங்களின் சொகுசு எல்லையில் இருந்து யாருக்குமே வெளிவர பிடிப்பதில்லை. அப்படியானால் பெண்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அதனால் தான் வீடு (சில நேரம் ஊர் அல்லது நாடு), குடும்பம், மொத்த வாழ்க்கை முறையில் ஏற்பட போகும் மாற்றத்தை எண்ணி பெண்களுக்கு தலைவலியே வந்து விடும். திருமணத்தை எண்ணி பயப்பட இந்த ஒரு காரணம் போதாதா?

இனிமேலும் செல்லம் கொடுக்க யாருமில்லை

பெண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரங்களில் ஒன்று - தன் தாயிடம் இருந்து தனக்கு கிடைக்கும் செல்லமும் அரவணைப்பும் தான். அவர்களுக்கு கிடைக்கும் இந்த அன்பு தான் அவர்களுக்கு திருமணத்தின் மீது பயத்தையே ஏற்படுத்தும். எங்கே இந்த அன்பும் செல்லமும் திருமணத்திற்கு பிறகு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமே. "என்ன போல உன் மாமியார் நீ செய்யும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள மாட்டாங்க" என அடிக்கடி ஒரு தாய் கூறுவதே போதும், அவர்களின் பயம் அதிகரிக்க.

திருமணம் என்னும் நெறிமுறையை பராமரிப்பது

திருமணத்திற்கு பிறகு, இந்திய பெண்களின் வாழ்க்கை பல வித எதிர்ப்பார்ப்புகளுக்கு ஆளாகி விடும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்வது, அவர்களை வளர்ப்பது, அவர்களின் கல்விக்காக சேர்த்து வைப்பது போன்றவைகள். ஆனால் இன்றைய பெண்களோ "என் வாழ்க்கை, என் தேர்வு" என்ற தாரக மந்திரத்துடன் இருப்பதால், அவர்கள் திருமணத்தை தள்ளி வைக்க இந்த காரணத்தையும் கூட முன் வைக்கலாம்.

அர்பணிப்பு பயம்

ஆண்கள் மட்டுமே அர்பணிப்புகளுக்கு பயந்தவர்கள் என தவறாக எண்ணி விடாதீர்கள். பெண்களுக்கும் உறவுகளை எண்ணி சில பயங்கள் இருக்கும். "இது வெறும் அறிவற்ற மோகமாக இருந்தால்?", "இது ஒத்து வரவில்லை என்றால்?", போன்ற பல கேள்விகள் அவர்களை வந்து குடைவதால், தங்கள் எண்ணத்தை திருமணத்தின் மீது செலுத்த விரும்ப மாட்டார்கள்.

தொழில் ரீதியான சிக்கல்

திருமணம் முடிந்து விட்டால் அது தங்களின் குறிக்கோள்களுக்கும், தொழில் ரீதியான திட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போலாகும் என தான் பல பெண்களும் நினைக்கின்றனர். தங்கள் ஊர் அல்லது நாட்டை விட்டு செல்ல வேண்டிய பெண்கள் இந்த நிலைக்கு ஓரளவிற்கு தள்ளப்படுவது உண்மையே. அதற்கு காரணம் புதிய இடத்தில் அவர்களுக்கு புதிய பணி சுலபமாக கிடைக்குமா என சொல்ல முடியாது. கஷ்டப்பட்டு பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விட்டு விட யாருக்கு தான் மனம் வரும்.

கூடுதல் பொறுப்புகள்

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும். பல பெண்கள் சமையல், சுத்தப்படுத்துதல், இதர வீட்டு வேலைகள் என பல்வேறு பொறுப்புகளை தூக்கி சுமக்க வேண்டி வரும். பல தாய்மார்கள் தங்கள் மகன்களுக்கு பெண் தேடுகிறார்கள் என்றாலே தங்கள் வீட்டு சுமையை சுமப்பதற்கும் சேர்த்து பெண் தேடுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும். அது இன்று வரை அப்படி தான் நடக்கிறது. கண்டிப்பாக பல இளம் பெண்களுக்கு இதில் உடன்பாடு இருப்பதில்லை. அவர்கள் வருத்தப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என ஒத்துக் கொள்கிறீர்களா?

முழு குடும்பத்துடன் ஒத்துப்போவது

இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு பேரை மட்டுமே சேர்ப்பதில்லை. மாறாக, அவர்களின் குடும்பத்தையும் தான் இணைக்கிறது. திருமணத்திற்கு பிறகு புதிய சொந்தங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டியலுடன் அவர்கள் பழக வேண்டி வரும். இந்த சொந்த பந்தங்களை பிடிக்கவில்லை என்றாலும் கூட பிடிக்கிற மாதிரி நடிக்க வேண்டும். அவர்கள் நினைப்பதை போல் நடந்து கொள்ள வேண்டும். இந்த புதிய உறவுகள் மட்டுமல்ல மற்றவர்களை பயமுறுத்துவது; இந்த சொந்தங்களுக்காக இவர்கள் செய்ய வேண்டிய மாற்றங்களும் தான் இவர்களுக்கு திருமணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தும் காரணமாகும்.

சுய அடையாளத்தில் மாற்றம்

இந்தியாவில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் பெயரின் பிற்பாதியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமுதாயத்தில், அவர்களின் முதல் பெயரை கூட மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது சில பெண்களுக்கு பிடிப்பதில்லை. அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த அவர்களின் சுய அடையாளத்தையே மாற்றுவதை போலாகும்.


நன்றி: http://tamil.boldsky.com