Home » » வாசனையால் வரும் வம்புகள்...!

வாசனையால் வரும் வம்புகள்...!

மாடர்ன் இளைஞர் ஒருவர் புன்னகையை வீசியபடி சாலையில் நடந்து செல்வார். அப்போது அங்கிருக்கும் யுவதிகள் எல்லோரும் அவரைக் காதல் பார்வை பார்த்த படியும், பின்தொடர்ந்து செல்லும்படியும் காட்சிகள் விரியும். இறுதியாக அவர்  பயன்படுத்திய வாசனை திரவியம்தான் யுவதிகளை ஈர்த்தது என்று அந்த விளம்பரம் முடியும். இதைப் பார்த்ததும் நீங்களும்  அதன் மீது மோகம் கொண்டு அந்த வாசனைத் திரவியத்தை வாங்கிப் பீய்ச்சிக் கொள்பவரா? செயற்கை நறுமணப்  பொருட்களினால் சருமம் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரும மருத்துவர் வானதி திருநாவுக்கரசு இது குறித்துக் கூறும்போது...

‘‘நறுமணப்பொருட்களை பூஞ்சை, பாக்டீரியா போன்றவற்றின் பாதிப்பிலிருந்து காப்பாற்றவும், அதிக காலத்துக்குக் கெட்டுப்  போகாமல் இருக்கவும், பயன்படுத்தியவுடன் கரைந்து விடாமல் நீடித்த நேரம் செயல்படவும், விதவிதமான நிறங்களுக்காகவும்  பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன் படுத்தப்படுகின்றன. சோப், ஷாம்பு, பவுடர், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே என அன்றாட  வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகிற நறுமணப் பொருட்களின் உற்பத்திக்காக 5 ஆயிரத்துக்கும் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவற்றில் 20 சதவிகித ரசாயனங்கள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மிக அபாயகரமானவை என நிரூபிக்கப்பட்டவை. International nomenclature of cosmetic ingredients அமைப்பு  உலக அளவில் நறுமணப்பொருட்களில் உள்ள ரசாயனங்களுக்கு பொதுவான பெயரையே பயன்படுத்த வேண்டும் என  வலியுறுத்துகிறது. ஆனால், இதை எந்த நிறுவனங்களும் பின்பற்றுவதில்லை. மருந்து, மாத்திரைகளில் கூட அதை உற்பத்தி  செய்வதற்கென பயன்படுத்தப்பட்ட மூலக்கூறுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கும். 

எந்த ஒரு பொருளானாலும், அது எதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை  நுகர்வோருக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது உற்பத்திப் பொருளின் மூலப் பொருட்களை வெளிப்படையாக அறிவிக்கின்றன. செயற்கை நறுமணப்பொருட்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ‘ஒவ்வொரு  நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதற்கென தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும். அதனால் தங்களது தொழில்  ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது’ என்கிற அடிப்படையில் அவை தாங்கள் பயன்படுத்தும் ரசாயன மூலக்கூறுகளை  வெளியே அறிவிப்பதில்லை.

ஆரம்ப காலங்களில் Balsam of peru என்கிற தாவரத்திலிருந்தும், musk deer என்று சொல்லக்கூடிய கஸ்தூரிமான்,  புனுகுப்பூனை மற்றும் சில வகை எலி மற்றும் ஆமைகளிலிருந்து நறுமணப்பொருட்களுக்கான மூலக்கூறுகள் எடுக்கப்பட்டன.  இதன் காரணமாக தொடர்புடைய உயிரினங்களின் வேட்டை அதிகரித்து உயிரியல் சூழலை சிதைத்ததால் உலக அளவில் இந்த  வேட்டைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின் கஸ்தூரிமானிலிருந்து கிடைத்த musk மற்றும்  தாவர வகையான balsam of peru ஆகியவற்றின் மூலக்கூறை செயற்கையாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். 

பலவிதமான muskகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றில் Aromatic nitromusk, Polycyclic musk  ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நறுமணப்பொருட்களை  பதப்படுத்துவதற்காக paraben எனும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. மேலைநாடுகளில் இந்த ரசாயனத்துக்கு எதிரான  விழிப்புணர்வு பெருமளவில் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் paraben free பொருட்களுக்கென தனியொரு சந்தையே இருக்கிறது.  மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ஆய்வு செய்யும்போது paraben இருப்பது அறியப்பட்டுள்ளது. 

செயற்கையாக நறுமணம் அளிக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் மூலம் இது போன்று பல விளைவுகளைச் சந்திக்க  நேரிடும். அதனால், வாசனையற்ற (Fragrance free) பொருட்களைப் பயன்படுத்தலாம். Unscented என்று  குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் கூட palsam of peru இருப்பதால், அதையும் தவிர்ப்பது நல்லது. அக்குள் பகுதியில்  வெள்ளையாக தேமல் போன்று இருப்பதாக ஒரு இளைஞர் என்னிடம் வந்தார். அவரிடம்  பேசிய பிறகு டியோடரன்ட் பயன்படுத்தியதற்கு பிறகுதான் இப்படி நிகழ்ந்தது என்றார். 

உடனே டியோடரன்ட் பயன்படுத்துவதை நிறுத்திவிடச் சொல்லி விட்டு சிகிச்சை அளித்தேன். டியோடரன்டுக்கு பதிலாக ஜவ்வாது  போன்ற இயற்கையாக நறுமணம் தரக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தும்போது இவ்வாறான பிரச்னைகளை எதிர்கொள்ளத்  தேவையில்லை. தினம் இரு முறை குளித்து, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தாலே செயற்கை நறுமணப்  பொருட்களுக்கான தேவை இருக்காது’’ என்கிறார் வானதி  திருநாவுக்கரசு.

நன்றி http://www.dinakaran.com