Home » » சுவாதி கொலை வழக்கில் பேரதிர்ச்சி முதல் கைது வரை: பதியத்தக்க 15 தகவல்கள்!

சுவாதி கொலை வழக்கில் பேரதிர்ச்சி முதல் கைது வரை: பதியத்தக்க 15 தகவல்கள்!


தலைநகர் சென்னையை ஏன் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர வைத்த செய்தி சுவாதி கொலை சம்பவம். காலை நேரத்தில் பயணிகள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் அனைவரும் பார்க்கும்படி ஓர் இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞன் யார் என்ற செய்திதான் அனைத்து ஊடகங்களிலும் கடந்த 24-ம் தேதி முதல் செய்தியாக இருந்து வந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது. கொலையாளி நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) எனத் தெரியவந்துள்ளது.

சுவாதி வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், படுகொலை ஏற்படுத்திய பேரதிர்ச்சி முதல் இதுவரை நடந்த சம்பவங்களின் சிறு தொகுப்பு:

1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந்த இளம் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடுகிறார். தகவல் பரவ, முதல் தகவலாக இறந்துபோன அந்தப் பெண் சுவாதி (22), த/பெ. சந்தான கோபாலகிருஷ்ணன், கங்கை அம்மன் கோயில் தெரு, சூளைமேடு, சென்னை என்பதும் அவர் மகேந்திரா டெக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஊழியர் என்ற செய்தியும் கிடைக்கிறது.

2. அடுத்த நாள் (ஜூன் 25-ம் தேதி) ரயில்வே போலீஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேக நபரின் காட்சி சிக்குகிறது. அந்த புகைப்படத்தை போலீஸார் வெளியிட ஊடக கவனத்துக்கு வந்த புகைப்பட்டம் பொதுமக்கள் மத்தியில் வைரலாக பரவியது.

3. அடுத்த இரண்டு நாட்களுக்கு கொலையில் துப்பு துலங்காமல் ரயில்வே போலீஸார் திணற சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. வழக்கு விசாரணையில் ரயில்வே போலீஸுக்கும் தமிழக காவல்துறைக்கும் இடையே பிரச்சினை இருக்கிறதா என உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்ட வழக்கு தமிழக காவல்துறையின் கைகளுக்கு மாறுகிறது. ஜூன் 27-ம் தேதி வழக்கு விசாரணை தமிழக காவல்துறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

4. ஒரே ஒரு சிசிடிவி ஆதாரம் மட்டுமே என்ற நிலையில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள், பணியிடம் அவர் இதற்கு முன்னர் வேலை பயிற்சி நிமித்தமாக சென்றிருந்த பெங்களூரூ, மைசூரூ என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டது.

5. வித்தியாசமான ஆயுதம்: கொலைக்காக பயன்படுத்தப்பட்ட அரிவாள் சற்றே வித்தியாசமாக இருந்ததால், கொலையாளி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. பெங்களூரு, மைசூருவில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே வெளியான சிசிடிவி பதிவில் இருந்த அதே நபர் சுவாதி கொலை நிகழ்ந்த சில நிமிடங்களில் ரயில் நிலையத்திலிருந்து வேகமாக ஓடி வரும் மற்றொரு சிசிடிவி ஆதாரமும் போலீஸுக்கு கிடைத்தது. இதைவைத்து போலீஸார் அந்த நபர்தான் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தனர். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த சிலரும் போலீஸுக்கு சிசிடிவி பதிவில் தோன்றிய நபர்தான் சுவாதியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

6. கிட்டத்தட்ட கொலையாளியை நெருங்கிவிட்டதாக சுவாதி கொலை வழக்கில் போலீஸ் விசாரணை ஒருபுறம் துரிதமாக நடந்து கொண்டிருக்க, சுவாதி கொலையை கண்டித்து அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கைகள் வெளியிடத் தொடங்கினர். தலைநகரமா, கொலைநகரமா என எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஸ்டாலின் சுவாதியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அடுத்தடுத்து திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் என தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் சொல்லும் படலம் தொடங்கியது.

7. ஒய்.ஜி. சர்ச்சை: இந்த நேரத்தில்தான் சினிமா பிரபலங்களில் ஒருவரான ஒய்.ஜி.மகேந்திரனின் ஒரு ஃபேஸ்புக் பதிவு இணைய உலகில் பெரும் சூறாவளியை கிளப்பியது. குற்றவாளி 'பிலால் மாலிக்' எனவும் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்றும் ஒரு கருத்தை பதிவு செய்தார். இதற்கு இணைய உலகில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குற்றவாளியை போலீஸார் கைது செய்யாத நிலையில் ஒரு முஸ்லிம் பெயரை பயன்படுத்துவதா என தடா ரஹீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு எதிராக புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரன் ஃபேஸ்புக்கில் தன்னிலை விளக்கம் அளித்ததோடு மன்னிப்பும் கோரினார்.

8. சுவாதி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய கெடு முடிவுக்கு வந்தது. இதனால் போலீஸுக்கு நெருக்கடி வலுத்தது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சுவாதி குற்றவாளியை ஏன் இன்னமும் பிடிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.

9. நெருங்கிவிட்டோம்: சூளைமேட்டில் தெருத்தெருவாக வீடுவீடாக ஒரு மேன்சன் கூட விடாது விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். சென்னை காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் அளித்த பேட்டியில் குற்றவாளியை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், சுவாதி வீட்டருகேயே குற்றவாளி இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

10. ஜூலை 1 வெள்ளிக்கிழமை. சுவாதி கொலை நடந்து சரியாக ஒரு வாரம். அன்று இரவு 10.30 மணிக்கு நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்களை அச்சுறுத்துவதற்காக அந்த இளைஞர் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். அவரை மீட்டு போலீஸார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.

11. குற்றவாளி கைது: சுவாதியை கொலை செய்த குற்றவாளி நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24). அவரும் பொறியியல் பட்டதாரி. வேலை தேடி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சென்னை சூளைமேட்டுக்கு வந்தவர். அங்கு ஏ.எஸ்.மேன்சனில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த அறை எண் 404.

12. ஜூலை 2: ஆணையர் அறிவிப்பு- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் (24) என்பதை சென்னை காவல் ஆணையர் டி.ராஜேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

13. பழக மறுத்தாதால் விபரீதம்: சுவாதி தன்னுடன் பழக மறுத்ததால் கொலை செய்ய ராம்குமார் முடிவு செய்ததாகக் கூறினார். இருப்பினும், கொலைக்கான உள்நோக்கம் குறித்து போலீஸார் ராம்குமாரிடம் விசாரித்து வருவதாகவும் கூறினார்.

14. சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்து பேட்டியளித்த காவல் ஆணையர் ராஜேந்திரன், இந்த வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றச்செயலலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கூட்டாளியாக யாரும் செயல்படவில்லை என்றார்.

15. சுவாதி கொலை வழக்கில் போலீஸார் நடவடிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டியுள்ளார்.